
என்னோடு தான்
உறங்குகின்றாள்
எனக்கு முன்பே
விழித்து விடுகிறாள்
அவள் தூங்கியதை
இதுவரை பார்த்தில்லை
நான்
எனக்கு பிடித்ததை
எல்லாம்
அறிந்தும் புரிந்தும்
செய்து தருகிறாள்
அவளுக்கு பிடித்தது
எது ?
இதுவரை கேட்டதில்லை நான்
விக்கல் வந்தால்
தண்ணீர் தருகிறாள்
அவளுக்கு விக்கல் எடுத்து
பார்த்ததில்லை இதுவரை
கூப்பிட்டால்
குளித்து வருகிறாள்
போதுமென்றால்
தள்ளி படுக்கிறாள்
அவளுக்கு அது தேவையா
கேட்டதில்லை
கோபம் கொண்டால்
அமைதியாய் இருக்கிறாள்
ஆனால்
அவள் கோபப்பட்டு
பார்த்தில்லை நான்
நான் பேசினால்
பேசுவாள்
அழுதால்
அழுவாள்
சிரித்தால்
சிரிப்பாள்
அவளுக்கென்று ஒர் உணர்வில்லையா
உணர்ந்து பார்த்தால்
வலிக்கிறது என் இதயம்...
ம்ம்ம்ம்
மீண்டும் ஓர் ஜென்மம்
பிறக்க வேண்டும்
நானும் அவளும்
இடம் மாறி பிறக்க வேண்டும்...